விடியல்கள்...........!


எப்பொழுதும் போலவேதான் அன்றைய பொழுதும் புலர்ந்திடத் தொடங்கியிருந்தது! கூரையில் ஒட்டியிருக்கும் ஓட்டை மின்விசிறியின் வழக்கமான தடக், தடக் நிசப்தத்தை விரட்டி சன்னமாய் சப்தமெழுப்பியதைத் தவிர புதிதாய் வேறொன்றையும் சாதித்திருக்கவில்லை! கசகசப்பான வியர்வை உணர்வு சற்று வழக்கத்துக்கு முன்னதாகவே என்னை எழுப்பி விட்டிருந்தது! லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டெழுந்தேன்! சோம்பல் முறிக்க கைகளை உயர்த்திவிட முடியாது! மின்விசிறி கழன்று கையோடு வந்துவிடக் கூடும் என்ற முன் ஜாக்கிரதை உணர்வால் அம்முயற்சியைத் தற்காலிகமாக ஒத்திவைக்கத் தலைப்பட்டேன்!

அறைக் கதவைத் திறந்தபோது மெல்லியதாய் காற்று அறைக்குள் எட்டிப் பார்த்தது! வெற்றுடம்பின் மார்புப் பிரதேசங்களின் மீது மோதி வெளியேறு காற்று என் உடலின் வெப்பம் காரணமாக சிலுசிலுப்பைத் தரும் தன் முயற்சியில் தோற்றுவிட்டிருந்தது! இன்னமும் என் சுவாசத்தில் உஷ்ணமே மிகுந்திருந்தது!

மேசையின் மீது உட்கொள்ள மறந்துவிட்டிருந்த மாத்திரைகள் பிரிக்கப்பட்ட காகித உறைகளின் மீதே கிடந்தன! அறைக்குள் வந்துசெல்லும் பக்கத்து அறைவாசிகள் விட்டுச் சென்ற சிகரெட் துண்டுகள் தரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்! இன்னும் கொஞ்சம் விடிந்ததும் அறையைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்! புழுதி படர்ந்த தரையில் என் பாதங்களில் ஒட்டிக் கொண்ட புழுதி அப்படியொரு அவசரத்தீர்மானத்தைத் தாக்கல் செய்துவிட்டது!

தெருவோரக் குப்பைக் கழிவுகளின் ரசாயன விளைவுகளாலோ என்னவோ எங்கள் விடுதிப்பக்கம் கொசுக்களின் தொல்லை இருந்ததில்லை! தெருவெங்கும் தங்குதடையின்றி சுற்றித் திரியும் மாடுகளின் சாணங்களும் இதற்கொரு முக்கியக் காரணியாய் விளங்குவதாய் விடுதி மக்கள் சிலாகித்துச் சொல்லிக் கொள்வதுவுமுண்டு!

அதிகாலை நேரத்து கடற்கரைக் காற்றை அனுபவிக்க ஆவல் எழுந்தது! அறையைப் பூட்டிக் கொண்டு விடுதியினின்று வெளியேறினேன். அவசரத்தில் போடாமல் விட்டிருந்து சட்டைப் பொத்தான்கள் இரண்டையும் போட்டுக் கொண்டே சாலையில் இறங்கி நடக்கலானேன்!

இரவும் இல்லாமலும் முற்றிலும் விடிந்துவிடாமலிருக்கின்ற அந்த இடைப் பொழுது எவ்வளவு அருமையானதொன்றாக இருக்கிறது என்பதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்! சலனங்கள் இல்லாத சாலை, சந்தடிகள் குறைந்த தெருக்கள், பறவைகள் மட்டுமே விழித்தெழுந்து இரைக்கான தேடல்களுடன் இறக்கை உதறி பறக்கத் தொடங்கியிருக்கும் சப்தங்கள், மெர்க்குரி விளக்குகளின் வெளிச்ச ரேகைகள் என ஒவ்வொரு அணுவும் ரசிக்கத்தக்கவையாக மாறியிருக்கும் தருணமது! சில்லென்ற காற்று முகத்தில் அறைந்துசெல்ல, எனது நடையின் வேகத்தை அதிகமாக்கிக் கொண்டேன்!

இப்பொழுது அந்தச் சாலை முனையினை அடைந்திருந்தேன்! அந்தக் கடற்கரைச் சாலையினைக் கடந்தால் போதும்! கால்கள் புதையும் மணற்பரப்பைக் கொண்டவாறு கடற்கரை என்னை வரவேற்கும்! நிசப்தம் காலையாத காலைப்பொழுது அதுவென்பதால் கரையைத் தொட்டுச் செல்லவரும் அலைகளின் ஓசை தொலைவிலிருந்தும் என் செவிகளில் விழுந்த வண்ணமிருந்தன!

மணலைத் துளைத்து வெளியேறி குடுகுடுவென்றோடும் குட்டி நண்டுகள் அலைகளின் வருகையால் மீண்டும் மணற்பரப்பிற்குள் புகுந்து பதுங்கிக் கொண்டிருந்தன! அவைகளின் காலடி போட்டுச் சென்ற கோடுகளோ ஈர மணல்வெளிவில் விதம் விதமாய் வெவ்வேறு வடிவங்களிலான கோட்டுச் சித்திரங்களைப் படைத்துவிட்டுக் கொண்டிருந்தன! படைப்புகளின் மீதான அலைகளின் விமர்சனம் அவ்வளவாய் பாராட்டத்தகுந்ததன்றி இருந்ததால் அலைகளே அக்கோட்டுச் சித்திரங்களை அழித்து விட்டும் சென்றன!

அலைகள் நகர்ந்ததும் நண்டோவியர்கள் தங்கள் படைப்புத் தொழிலை மீண்டும் அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்!

கனமான காற்று தலைக் கேசத்தைக் கலைத்துச் சென்றது! அலைகள் தொட்டுச் செல்லும் பகுதியினை வெகுவாக நெருங்கிவிட்டிருந்தேன்! தொலைவில் வலைகளை ஏற்றிக் கொண்டு கட்டுமரங்களைத் தள்ளிக் கொண்டிருந்தனர் சிலர்! உடைந்த பாழடைந்த கட்டுமரங்கள் சிலவற்றையும் தொலைவில் காணமுடிந்தது! நேராகவும், சில கவிழ்ந்தும் கிடந்தன! இவை போன்ற கட்டுமரங்கள்தாம் மாலை நேரக் காதலர்களுக்கு கதவுகள் போலும்!

அறைக்குள் இருந்துகொண்டு செய்தித்தாள்களின் ஆட்கள் தேவை விளம்பரங்களைத் தேடித் தேடி கத்தரித்து எடுத்துக் கொண்டு, காலைச் சிற்றுண்டி, காபி, சிகரெட்டுமென முடித்துக் கொண்டும் வேலை தரா நிறுவனங்களைச் சபித்துக் கொண்ட்டும் இரவுப் பொழுதுகளில் சிகரெட்டும், சீட்டுக் கச்சேரியுமாய் பொழுதைக் கழியும் எங்களுக்கான விடியல்கள்தான் எப்பொழுதும் இல்லாதவையாகவே இருந்து கொண்டிருக்கின்றன!

சிப்பி பொறுக்கொண்டோடும் சில சிறுவர்கள்! அரைக்கால் டிராயரை மட்டுமே அணிந்து கையில் பிடித்த அழுக்குத் துணிப்பைக்குள் கைக்குக் கிடைக்கும் சிப்பிகளை அள்ளிச் சேகரித்துக் கொண்டிருந்தனர்! அவர்களுக்கான விடியல் அவர்கள் சேகரித்த சிப்பிகளின் விலைகள் வாயிலாகத் தெரியவரும் போல!
ஆயினும் இவர்களுக்கான விடியல்கள் தினந்தோறும் புலரத் தவறுவதேயில்லை!

வீரியங்கள்




ஒருபோதுமென்னைத்
தாக்கியதில்லை
பிரிவுகளின் துயர்களும்
பிரிவுகளின் நினைவுகளும்!

அருகாமைப் பொழுதுகளனைத்துமே
நினைவூட்டிய வண்ணம்தான்
இருந்திருக்கின்றன!
தொலைவுகளில் செல்லக்கூடிய
கணங்களையும் சந்திக்க நேருமென்று!

விடியாத நீண்ட
இரவுப் பொழுதுகளின்
நீட்சிகள்
விழிகளில் தரும்
அயற்சியையும் மீறி
ஏதோ உன்னைப்
பற்றிய
எண்ணவோட்டங்களை
என்னுள்ளே ஏற்படுத்திவிட்ட
தடங்களின் தடுமாற்றங்களை
கவனித்து
குறிப்பெடுத்துக் கொண்டுதானிருக்கின்றன
என் மூளைக்குள் செல்லும்
ரத்த நாளங்கள்!

நினைவுகளின்
வீரியங்கள்
என்னை
வீழ்த்திவிடப் போவதில்லை!
என்னை எப்பொழுதும்
நான்
இழந்துவிடாமதிருப்பதனால்!

நீரூற்று

வாழ்க்கைப் பயணங்கள் அனைத்தும் ஒரு நீரூற்றைப் போன்றானதொன்றேயென எப்பொழுதும் நம்பும் நான், அவ்வூற்றின் வழி பிறந்த அந்த ஓடையினூடே பயணிக்கும் என் எண்ணங்களை, எண்ணக் குவியல்களை எழுத்தென்னும் தூரிகையால் வண்ணக் குவியல்களாக்கி உங்கள் பார்வைக்கு வைக்க விழைகிறேன்!

என் எழுத்துக்களினூடே எப்போழுதும் உங்களுக்கு உடன்பாடு தோன்றாதிருக்கலாம்! அப்படி தோன்றவேண்டுமென்ற அவசியமும் ஒருபோதுமிருப்பதாக நான் எண்ணுபவனும் அல்ல! உடன்பாடுகளூடே இயன்ற மட்டும் முரண்பாடுகளும் இருந்தால்தான் வாழ்க்கைப் பயணம் இனிமையானதொன்றாக இருக்கக் கூடும்!

முரண்பாடுகள் தோன்றும்போதெல்லாம் இவ்வோடை தன் பாதையிலிருந்து விலகிச் சென்று வேறு பாதையில் ஓடிவிடாதபடி கரையோரங்களில் நீங்கள் கனமாய், கவனமாய் கருத்துச் சுவர்களை எழுப்பி வைக்கலாம்! ஆயினும் அச்சுவர்கள் ஓடையின் இயல்பை மாற்றிவிடாதிருக்கட்டும்!

எழுத்தின் இயல்புகளை, வடிவங்களை வாசித்தும், சுவாசித்தும் இருந்திருந்த எனக்குப் "பகலவன் பிரமீளா" என்ற புனைப்பெயரொன்றைச் சூட்டி கைபிடித்து வலையுலகின் வடம்பிடிக்க வைத்த நேசமிகு அன்பர்

அவர்களின் அன்புடனும், ஆசியுடன் உங்களுடனான உரையாடல்களைத் தொடங்க இருக்கிறேன்!

வலையுலகு என்னை வாஞ்சையுடன் தழுவிக்கொள்ளும் என்று நம்புகிறேன்!

இப்படிக்கு,
பகலவன் பிரமீளா!