எப்பொழுதும் போலவேதான் அன்றைய பொழுதும் புலர்ந்திடத் தொடங்கியிருந்தது! கூரையில் ஒட்டியிருக்கும் ஓட்டை மின்விசிறியின் வழக்கமான தடக், தடக் நிசப்தத்தை விரட்டி சன்னமாய் சப்தமெழுப்பியதைத் தவிர புதிதாய் வேறொன்றையும் சாதித்திருக்கவில்லை! கசகசப்பான வியர்வை உணர்வு சற்று வழக்கத்துக்கு முன்னதாகவே என்னை எழுப்பி விட்டிருந்தது! லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டெழுந்தேன்! சோம்பல் முறிக்க கைகளை உயர்த்திவிட முடியாது! மின்விசிறி கழன்று கையோடு வந்துவிடக் கூடும் என்ற முன் ஜாக்கிரதை உணர்வால் அம்முயற்சியைத் தற்காலிகமாக ஒத்திவைக்கத் தலைப்பட்டேன்!
அறைக் கதவைத் திறந்தபோது மெல்லியதாய் காற்று அறைக்குள் எட்டிப் பார்த்தது! வெற்றுடம்பின் மார்புப் பிரதேசங்களின் மீது மோதி வெளியேறு காற்று என் உடலின் வெப்பம் காரணமாக சிலுசிலுப்பைத் தரும் தன் முயற்சியில் தோற்றுவிட்டிருந்தது! இன்னமும் என் சுவாசத்தில் உஷ்ணமே மிகுந்திருந்தது!
மேசையின் மீது உட்கொள்ள மறந்துவிட்டிருந்த மாத்திரைகள் பிரிக்கப்பட்ட காகித உறைகளின் மீதே கிடந்தன! அறைக்குள் வந்துசெல்லும் பக்கத்து அறைவாசிகள் விட்டுச் சென்ற சிகரெட் துண்டுகள் தரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்! இன்னும் கொஞ்சம் விடிந்ததும் அறையைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்! புழுதி படர்ந்த தரையில் என் பாதங்களில் ஒட்டிக் கொண்ட புழுதி அப்படியொரு அவசரத்தீர்மானத்தைத் தாக்கல் செய்துவிட்டது!
தெருவோரக் குப்பைக் கழிவுகளின் ரசாயன விளைவுகளாலோ என்னவோ எங்கள் விடுதிப்பக்கம் கொசுக்களின் தொல்லை இருந்ததில்லை! தெருவெங்கும் தங்குதடையின்றி சுற்றித் திரியும் மாடுகளின் சாணங்களும் இதற்கொரு முக்கியக் காரணியாய் விளங்குவதாய் விடுதி மக்கள் சிலாகித்துச் சொல்லிக் கொள்வதுவுமுண்டு!
அதிகாலை நேரத்து கடற்கரைக் காற்றை அனுபவிக்க ஆவல் எழுந்தது! அறையைப் பூட்டிக் கொண்டு விடுதியினின்று வெளியேறினேன். அவசரத்தில் போடாமல் விட்டிருந்து சட்டைப் பொத்தான்கள் இரண்டையும் போட்டுக் கொண்டே சாலையில் இறங்கி நடக்கலானேன்!
இரவும் இல்லாமலும் முற்றிலும் விடிந்துவிடாமலிருக்கின்ற அந்த இடைப் பொழுது எவ்வளவு அருமையானதொன்றாக இருக்கிறது என்பதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்! சலனங்கள் இல்லாத சாலை, சந்தடிகள் குறைந்த தெருக்கள், பறவைகள் மட்டுமே விழித்தெழுந்து இரைக்கான தேடல்களுடன் இறக்கை உதறி பறக்கத் தொடங்கியிருக்கும் சப்தங்கள், மெர்க்குரி விளக்குகளின் வெளிச்ச ரேகைகள் என ஒவ்வொரு அணுவும் ரசிக்கத்தக்கவையாக மாறியிருக்கும் தருணமது! சில்லென்ற காற்று முகத்தில் அறைந்துசெல்ல, எனது நடையின் வேகத்தை அதிகமாக்கிக் கொண்டேன்!
இப்பொழுது அந்தச் சாலை முனையினை அடைந்திருந்தேன்! அந்தக் கடற்கரைச் சாலையினைக் கடந்தால் போதும்! கால்கள் புதையும் மணற்பரப்பைக் கொண்டவாறு கடற்கரை என்னை வரவேற்கும்! நிசப்தம் காலையாத காலைப்பொழுது அதுவென்பதால் கரையைத் தொட்டுச் செல்லவரும் அலைகளின் ஓசை தொலைவிலிருந்தும் என் செவிகளில் விழுந்த வண்ணமிருந்தன!
மணலைத் துளைத்து வெளியேறி குடுகுடுவென்றோடும் குட்டி நண்டுகள் அலைகளின் வருகையால் மீண்டும் மணற்பரப்பிற்குள் புகுந்து பதுங்கிக் கொண்டிருந்தன! அவைகளின் காலடி போட்டுச் சென்ற கோடுகளோ ஈர மணல்வெளிவில் விதம் விதமாய் வெவ்வேறு வடிவங்களிலான கோட்டுச் சித்திரங்களைப் படைத்துவிட்டுக் கொண்டிருந்தன! படைப்புகளின் மீதான அலைகளின் விமர்சனம் அவ்வளவாய் பாராட்டத்தகுந்ததன்றி இருந்ததால் அலைகளே அக்கோட்டுச் சித்திரங்களை அழித்து விட்டும் சென்றன!
அலைகள் நகர்ந்ததும் நண்டோவியர்கள் தங்கள் படைப்புத் தொழிலை மீண்டும் அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்!
கனமான காற்று தலைக் கேசத்தைக் கலைத்துச் சென்றது! அலைகள் தொட்டுச் செல்லும் பகுதியினை வெகுவாக நெருங்கிவிட்டிருந்தேன்! தொலைவில் வலைகளை ஏற்றிக் கொண்டு கட்டுமரங்களைத் தள்ளிக் கொண்டிருந்தனர் சிலர்! உடைந்த பாழடைந்த கட்டுமரங்கள் சிலவற்றையும் தொலைவில் காணமுடிந்தது! நேராகவும், சில கவிழ்ந்தும் கிடந்தன! இவை போன்ற கட்டுமரங்கள்தாம் மாலை நேரக் காதலர்களுக்கு கதவுகள் போலும்!
அறைக்குள் இருந்துகொண்டு செய்தித்தாள்களின் ஆட்கள் தேவை விளம்பரங்களைத் தேடித் தேடி கத்தரித்து எடுத்துக் கொண்டு, காலைச் சிற்றுண்டி, காபி, சிகரெட்டுமென முடித்துக் கொண்டும் வேலை தரா நிறுவனங்களைச் சபித்துக் கொண்ட்டும் இரவுப் பொழுதுகளில் சிகரெட்டும், சீட்டுக் கச்சேரியுமாய் பொழுதைக் கழியும் எங்களுக்கான விடியல்கள்தான் எப்பொழுதும் இல்லாதவையாகவே இருந்து கொண்டிருக்கின்றன!
சிப்பி பொறுக்கொண்டோடும் சில சிறுவர்கள்! அரைக்கால் டிராயரை மட்டுமே அணிந்து கையில் பிடித்த அழுக்குத் துணிப்பைக்குள் கைக்குக் கிடைக்கும் சிப்பிகளை அள்ளிச் சேகரித்துக் கொண்டிருந்தனர்! அவர்களுக்கான விடியல் அவர்கள் சேகரித்த சிப்பிகளின் விலைகள் வாயிலாகத் தெரியவரும் போல!
ஆயினும் இவர்களுக்கான விடியல்கள் தினந்தோறும் புலரத் தவறுவதேயில்லை!
விடியல்கள்...........!
Posted by
பகலவன் பிரமீளா
Wednesday, July 1, 2009
Labels: அனுபவம்
15 comments:
//இரவும் இல்லாமலும் முற்றிலும் விடிந்துவிடாமலிருக்கின்ற அந்த இடைப் பொழுது எவ்வளவு அருமையானதொன்றாக இருக்கிறது என்பதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்! சலனங்கள் இல்லாத சாலை, சந்தடிகள் குறைந்த தெருக்கள், பறவைகள் மட்டுமே விழித்தெழுந்து இரைக்கான தேடல்களுடன் இறக்கை உதறி பறக்கத் தொடங்கியிருக்கும் சப்தங்கள், மெர்க்குரி விளக்குகளின் வெளிச்ச ரேகைகள் என ஒவ்வொரு அணுவும் ரசிக்கத்தக்கவையாக மாறியிருக்கும் தருணமது! சில்லென்ற காற்று முகத்தில் அறைந்துசெல்ல, எனது நடையின் வேகத்தை அதிகமாக்கிக் கொண்டேன்!
//
மிகவும் ரசித்துப் படித்தேன். அழகான தருணங்கள்.
:)
நல்லா வந்திருக்கு. மொழி மிக அழகாக இருக்கு. வாழ்த்துகள்.
அனுஜன்யா
நல்லா வந்திருக்கு.. வாழ்த்துக்கள்!
காலை வேளையின் அழகும், அதன் வர்ணனைகளும் அருமை.
நல்ல முயற்சி.
மேலும் தொடருங்கள்.
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
பின்குறிப்பு:எங்கயாச்சும் போன அதை எப்படி பதிவா எழுதறுதுன்னே மண்டைகுள்ள ஓடுமே பின்ன எப்படி அனுபவம்?
வித்தியாசமா இருக்கு எழுத்து நடை! இது மாதிரி இன்னும் எழுதுங்க.
என்ன காரணமோ தெரியவில்லை.10 அல்லது 12 வயதில் மதுரையின் மாட வீதியில் அதிகாலை விடியலின் காட்சி இன்னமும் என் மனதை விட்டு அகலவே இல்லை.
பளிச்சென்று வாசல் தெளித்து கோலம் போட்டு,ரிக்ஷாக்கள் பயணிகளுக்காகத் தயாராகும் காட்சி,..
இத்தனைக்கும் நான் மதுரைவாசி இல்லை ..
உங்கள் பதிவு என்னை மதுரைக்கு அழைத்துச் சென்று விட்டது
கலக்குறீங்களே அப்பு...மொழிநடை நன்றாக இருக்கிறது. காட்சிப்படுத்தலும்...
வர்ணனைகள் அருமை.
அழகான மொழிநடை.
கண்ணா..
இம்புட்டு அறிவையும் வைச்சுக்கிட்டு ஏன் கண்ணு இங்கனக்குள்ள இருந்து எங்க உயிரை வாங்குற..?
விடியல் நேர கடற்கரை காற்றை, காட்சிகளை நேரில் அனுபவித்த உணர்வு தந்தது உங்கள் எழுத்து நடை.
வாழ்த்துக்கள்.
உரைநடையே கவிதையாய்..
கவிதையே உரைநடையாய்..
அழகு..
கதையையோடு காட்சியும் மனசில்... நிஜவாழ்வின் எதார்த்தோடு ஆரம்பம்...கதையின் கூடவே கற்பனையும் உடன் வந்தது..
//அலைகள் நகர்ந்ததும் நண்டோவியர்கள் தங்கள் படைப்புத் தொழிலை மீண்டும் அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்!//
கதையில் இவர்கள் பயணமும் அழகு..
ரொம்ப சிறப்பா இருக்கு அனைத்தையும் அலசி ஒரு முன்னோட்டம்...கதைக்கு காத்திருக்கு மனசு...
Nandru.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment